நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமரை குற்றம்சாட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, மோடி எந்த பதிலும் சொல்லாமல் சிரித்தபடி இருந்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தை இன்று (ஜூலை 20) மக்களவையில் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது. இதன்மீது பலரும் பேச, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பேசினார். 

அப்போது அவர், பிரதமர் அடிக்கடி வெளிநாடு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். எப்போதும் பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ காட்சியளிக்கும் பிரதமர் மோடி, கோட் சூட் அணிந்த பெரும் பணக்கார தொழிலதிபர்களை மட்டும் சந்தித்து கை குலுக்குகிறார். ஆனால், சாமானிய மக்கள், சிறு வர்த்தகர்களை ஒருபோதும் அவர் சந்திக்கவில்லை. பிரதமர் மோடியால் என்னை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. ஏனெனில், அவர் உண்மையாக இல்லை,’’ என காட்டமாக விமர்சித்தார். 

இந்த பேச்சின் அடையே, வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி என்பதை இந்தியில் பேசிய ராகுல் காந்தி, மோடி அடிக்கடி பாருக்கு செல்கிறார். அதாவது மோடி அடிக்கடி மதுபான விடுதிக்கு செல்கிறார் என்று பொருள்படும்படி பேசிவிட்டார். இதனை கேட்ட பிரதமர் மோடி உடனடியாக வெடித்துச் சிரித்துவிட்டார். மேலும் பல எம்.பிக்களும் ராகுல் பேச்சை கேட்டு சிரித்துவிட்டனர். உடனடியாக சுதாரித்துக் கொண்டு, பார் என்றால் இந்தியில் உலகம் என்றும், மது விற்கும் பார் இல்லை என்றும் ராகுல் விளக்கம் அளித்தார். 

இதனால், மக்களவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது. பிரதமர் மோடியும் சிரித்தபடியே இருந்தார். ராகுல் பேசி முடிக்கும் வரை புன்னகை முகத்துடனே மோடி காணப்பட்டார். பேச்சு முடிந்ததும் திடீரென பிரதமர் இருக்கைக்குச் சென்ற ராகுல் காந்தி, அவரை கட்டிப்பிடித்து மரியாதை செய்தார். இது அவையில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதேசமயம், காரசாரமாக பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி, அவரை கட்டிப்பிடித்து சமாதானம் செய்ய முயற்சித்தார் என்று, பாஜக தரப்பில் கூறப்படுகிறது.