‘ நாட்டுக்கு நல்லகாலம், 2019ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்தான் வரும். ரூபாய் நோட்டு விவகாரத்தால், சர்வதேச அளவில் இந்தியப் பிரதமர் ஒருவர் கேலிக்குரியவராக மாறி இருக்கிறார். மோடியைப் பார்த்து உலகமே சிரிக்கிறது ’ என்று ரூபாய் நோட்டு தடை எதிராக டெல்லியில் நேற்று நடந்த மாநாட்டில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
ஜன்தன் மாநாடு
ரூபாய் நோட்டு தடைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் ‘ஜன் வேதனா’(பொதுமக்கள் வேதனைகள்) என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் உள்ள தல்கோத்ரா அரங்கில் நேற்று நடந்தது.
தலைவர்கள்
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கட்சியின் மூத்ததலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் ராகுல்காந்தி பேசியதாவது-
சிரிப்பு பிரதமர்
நாட்டில் 86 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை தடை செய்து கடந்த நவம்பர் 8-ந்தேதி எடுத்த முடிவு என்பது ஆழ்ந்து சிந்திக்காமல் எடுத்த முடிவு. இந்த முடிவால், இந்திய பிரதமர் ஒருவர் முதல் முறையாக சர்வதேச அளவில், கேலிக்குரியவராக மாறி இருக்கிறார்.

தன்னிச்சையான முடிவு
உலகில் உள்ள எந்த ஒரு பொருளாதார நிபுனரும், பிரதமர் மோடியின் முடிவு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு என்று கூறவில்லை, வரவேற்கவில்லை. ரூபாய் நோட்டு தடை முடிவு என்பது பிரதமர் மோடியின் தனிப்பட்ட முடிவாகும்.
16 ஆண்டு பின்னோக்கி
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால், நாட்டின் பொருளாதாரம் கடந்த 16 ஆண்டுகளுக்கு பின்தங்கிச் சென்றுவிட்டது. வாகனங்கள் விற்பனை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துவிட்டது.
2.5 ஆண்டுகளில்?
இந்த நாட்டுக்கு காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாததைய, பாரதியஜனதா அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் செய்து முடித்துவிட்டதா?.


கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் ‘அச் ஹே தின்’(நல்லகாலம்பொறக்குது) வந்துவிடும் என்று கூறியிருந்தார். ஆனால், இதுவரை அந்த நல்லகாலத்தை இப்போதுள்ள நிலையில் பார்க்க முடியாது. உண்மையில், நாட்டுக்கு நல்லகாலம் 2019ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதுதான் பிறக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
