Rahul Gandhi address at UC Berkeley LIVE updates In Kashmir UPAs 9 years of work destroyed in 30 days by NDA
வரும் 2019ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைவராக, பிரதமர் வேட்பாளராக தான் தயார் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் 2 வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை இன்று கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ‘இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியை சிலாகித்துப் பேசிய ராகுல், பாரதீய ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.
காங்கிரஸ் அரசு கடந்த 9 வருடங்கள் கடுமையாக முயற்சி செய்து காஷ்மீரில் ஏற்படுத்தி வைத்த அமைதியை பாஜக., அரசு 30 நாட்களில் சீரழித்து விட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், தான் பிரிவினைவாதத்தை ஆதரிப்பவன் இல்லை என்றும், பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று. பயங்கரவாதத்துக்கு என் பாட்டியையும், தந்தையும் நான் இழந்திருக்கிறேன், என்னைவிட யார் வன்முறையை சரியாக புரிந்துக் கொள்ளமுடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடிக்கு பேச்சுத் திறமைதான் இருக்கிறது, ஆனால் குளறுபடியான ஜிஎஸ்டி, வேலை இழப்பை ஏற்படுத்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத தூய்மை இந்தியா திட்டம் எல்லாம் மோடியின் திட்டங்கள்தான். காங்கிரஸ் ஆட்சியில் நாடு பெற்ற வளர்ச்சிக்கு நேர்மாறாக இப்போது மோடியின் ஆட்சியில் எல்லாம் நடக்கிறது.
இந்தியாவில் கருத்து சுதந்திரமும் அடியோடு பறிபோய்விட்டது. கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள். முந்தைய ஆட்சியில் அனைவரிடமும் கருத்து கேட்டு ஆட்சி நடத்தப்பட்டது. எந்த ஒரு கொள்கைத் திணிப்பும் இல்லை. ஆனால் இப்போது கருத்து சொல்லவே பலரும் பயப்படும் நிலையில் நாடு உள்ளது என்று கூறினார் ராகுல்.
பாஜகவைச் சேர்ந்த ஆயிரம் பேர் கம்பியூட்டர் முன்னால் இருந்து கொண்டு என்னைக் குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். நாட்டை வழிநடத்துபவர்தான் இந்த ஆயிரம் பேரையும் வழி நடத்தி வருகிறார் என்று மோடியை கடுமையாகச் சாடினார் ராகுல் காந்தி.
