ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் நேற்றுடன் முடிந்தநிலையில், காங்கிரஸ்துணைத் தலைவர் ராகுல்காந்தி, 5 கேள்விகளை பிரதமர் மோடிக்கு முன்வைத்துள்ளார்.
ரூ.500, ரூ.1000 நோட்டுரூபாய் நோட்டு தடை அறிவிப்பு கடந்த நவம்பர் 8-ந்தேதி வெளியாகி நேற்றுடன் 50 நாட்கள் முடிவடைந்தது. அடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று மக்களுக்கு உரையாற்ற உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு 5 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளிக்க முடியாமா? எனக் கேட்டுள்ளார். அதில் அவர் கூறப்பட்டுள்ளதாவது-
ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு செய்து 50 நாட்கள் முடிந்துவிட்டன. ஒட்டுமொத்த இந்தியாவுமே பிரதமர் மோடி உங்களின் பதிலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு முன் சில கேள்விக்கான பதில்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
1. கடந்த நவம்பர் 8-ந்தேதி ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டதில் இருந்து கருப்புபணம் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது?
2. ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் எவ்வளவு?, எத்தனை பேர் வேலை இழந்தனர்?
3. கடந்த 50 நாட்களில் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பாதிப்பால் எத்தனை பேர் உயிர் இழந்தனர். அவர்களுக்கு இழப்பீடு ஏதும் கொடுக்கப்பட்டதா?
4. பணமதிப்பு இழத்தல் அறிவிப்பை பிரதமர் மோடி அறிவிக்கும் முன்பாக, யாருடன் கலந்தாய்வு செய்து முடிவை அறிவித்தார்? வல்லுநர்கள், பொருளாதார நிபுனர்கள், மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் ஏன் கலந்தாய்வு செய்யவில்லை?
5.கடந்த நவம்பர் 8-ந்தேதியிலிருந்து 6 மாதத்துக்கு முன் ரூ.25 லட்சத்துக்கு அதிகமாக வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் யார், அவர்கள் பட்டியலை வௌியிட வேண்டும்?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
