ரபேல் விவகாரம் போல் மல்லையா விஷயத்திலும் மத்திய அரசு பொய் சொல்லி தப்பிக்க பார்க்கிறது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது. நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லியை, விஜய் மல்லையா சந்தித்துள்ளார். தனது சந்திப்புகள் பற்றி சமூகவலைத்தளத்தில் பதிவிடும் அருண்ஜேட்லி, இந்த சம்பவம் குறித்து ஏன் குறிப்பிடவில்லை. 

ஒருசில வார்த்தைகள் மட்டுமே மல்லையா தம்மிடம் பேசியதாக அருண்ஜேட்லி கூறியது. தலைமறைவான மல்லையா, மத்திய நிதியமைச்சரை சந்தித்தபோது, லண்டனுக்கு செல்வதாக கூறியுள்ளார். அதை சிபிஐ, அமலாக்கத்துறை அல்லது காவல்துறைக்கு ஏன் அருண்ஜேட்லி தெரிவிக்கவில்லை. எனவே ஒரு குற்றவாளி நாட்டைவிட்டு ஓடுவதற்கு அருண்ஜேட்லி உடந்தையாக இருந்துள்ளார். 

மேலும் மல்லையா விவகாரத்தில் கைது நோட்டீஸ், தகவல் தெரிவிக்கும் நோட்டீசாக மாற்றப்பட்டது. சிபிஐ அமைப்பைக் கட்டுப்படுத்தும் ஒருவர்தான் இதைச் செய்திருக்க முடியும். ரபேல் விவகாரத்தில் பொய் சொல்லும் மத்திய அரசு, விஜய் மல்லையா விவகாரத்திலும் பொய் கூறுகிறது என கூறினார்.