காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமைப் பெற்றவர் அல்ல; அவர் இந்தியாவில்தான் பிறந்தார் என்று ராகுல் பிறந்தபோது டெல்லி மருத்துவமனையில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ராஜம்மா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமைப் பெற்றவர் என அமேதியில் தேர்தல் வேட்புமனு பரிசீலனையின்போது புகார் எழுப்பப்பட்டது. பின்னர் ராகுல் தரப்பு விளக்கத்துக்குப் பிறகு அவருடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து குடியுரிமை தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையே டெல்லியைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல், சந்தர் பிரகாஷ் தியாகி ஆகியோர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பதைக் காரணம் காட்டி அவரை தேர்தலில்  போட்டியிட தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ராகுல் குடியுரிமை பற்றி தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து எழுப்பப்படும் இந்த விவாதம் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் சுல்தான் பத்ரியில் வசித்துவரும் 72 வயதான ஓய்வுபெற்ற செவிலியர் ராஜம்மா வவாதில், “ ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்தார் என்பதற்கு தானே நேரடி சாட்சி” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராஜம்மா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.


 “ராகுல் காந்தி 1970-ம் ஆண்டு ஜூன் 19 அன்று டெல்லி ஹோலி ஃபேமலி மருத்துவமனையில் பிறந்தார்.அப்போது நான் அந்த மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக இருந்தேன். ராகுல் காந்தியை கையில் ஏந்திய செவிலியர்களில் நானும் ஒருவர். ராகுல் இந்தியாவில்தான் பிறந்தார் என்பதற்கு நானே சாட்சி. 
சோனியா பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றபோது, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோர் பிரசவ அறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர். இதை என் குடும்பத்தாரிடம் பல முறை கூறி இருக்கிறேன். ராகுலின் குடியுரிமை குறித்து எழுந்துள்ள புகார்  வருத்தமளிக்கிறது. ராகுலின் குடியுரிமை அடையாளத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. இதுதொடர்பான புகார் ஆதாரமற்றது.
ராகுல் டெல்லியில் பிறந்தார் என்பதற்கான எல்லா ஆவணங்களும் மருத்துவமனையில் நிச்சயம் இருக்கும். இந்திரா காந்தியின் பேரனை  வயநாட்டில் நான் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 49 வயதாகும் கியூட் பேபியான ராகுல் காங்கிரஸ் தலைவராக வயநாட்டில் போட்டியிடுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ராகுல் காந்தி அடுத்த முறை வயநாட்டுக்கு வரும்போது நான் அவரைச் சந்திக்க காத்திருக்கிறேன்.”
இவ்வாறு செவிலியர் ராஜம்மா தெரிவித்துள்ளார்.