சி.பி.ஐ என்பது இந்தியாவின் மிக உயரிய புலனாய்வு அமைப்பாகும். குற்ற வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் வேறு எந்த அமைப்பிற்கும் கிடையாது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த புலனாய்வு அமைப்பின் தலைவராக இருப்பவர் தான் சி.பி.ஐ இயக்குனர் என்று அழைக்கப்படுகிறார். சி.பி.ஐ இயக்குனரை நேரடியாக பிரதமர் மோடியோ வேறு யாரோ நியமிக்க முடியாது. 

பிரதமர் பதவியில் இருப்பவர், நாட்டின் தலைமை நீதிபதியாக இருப்பவர், எதிர்கட்சி தலைவராக இருப்பவர் என மூன்று பேர் இணைந்தே சி.பி.ஐ இயக்குனரை நியமிக்க முடியும். மூன்று பேரில் இரண்டு பேர் எதிர்ப்பு தெரிவித்தால் சி.பி.ஐ இயக்குனர் நியமனம் சாத்தியப்படாது. அதாவது பிரதமர் மட்டும் விரும்பினால் போதாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது நாட்டின் எதிர்கட்சி தலைவரும் சி.பி.ஐ இயக்குனர் நியமனத்திற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும். 

இந்த அளவிற்கு மிகவும் சென்சிடிவான சி.பி.ஐ இயக்குனர் பதவியில் இருந்த அலோக் வர்மா தான் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ வரலாற்றில் இயக்குனராக இருந்த ஒருவர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவது இதுவே முதல் என்று சொல்லப்படுகிறது.

 

ஆனால் வாஜ்பாய் ஆட்சியின் போது சி.பி.ஐ இயக்குனர் பதவியில் இருந்து ஜோகிந்தர் சிங் என்பவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எது எப்படியோ சி.பி.ஐ இயக்குனர் பதவியில் இருந்து ஒருவரை ஓரங்கட்டுவது என்பது பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏன் அரசியல் சாசன பிரச்சனைய கூட ஏற்படுத்தக்கூடியது. அப்படி இருக்கையில் அலோக் வர்மா ஏன் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டு, கூடுதல் இயக்குனர் அந்தஸ்தில் இருக்கும் நாகேஸ்வர ராவ் சி.பி.ஐ இயக்குனராக நியமிக்கப்பட்டார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. என்னதான் ராகேஷ் அஸ்தானா எனும் சி.பி.ஐ சிறப்பு இயக்குனருடன் ஏற்பட்ட மோதல் தான் அலோக் வர்மா பதவி இழக்க காரணம் என்று சொல்லப்பட்டாலும் உண்மை வேறு என்கிறார்கள்.

 

ராகேஷ் அஸ்தானா குஜராத் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். மோடியின் நன்மதிப்பை பெற்றவர். சி.பி.ஐயில் தனக்கு நம்பகமான ஒருவர் தேவை என்று மோடி குஜராத்தில் இருந்து அஸ்தானாவை டெல்லிக்கு அழைத்து சி.பி.ஐ சிறப்பு இயக்குனர் ஆக்கினார்.  இந்த அளவிற்கு மோடியின் ஆதரவுடன் இருக்கும் அஸ்தானா தனக்கு மேல் அதிகாரியுடன் பிரச்சனையில் ஈடுபடுகிறார் என்றால் இந்த விவகாரத்தை ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்றுவிட முடியாது. 

அஸ்தானா – அலோக் வர்மா இடையிலான மோதலே நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று என்கிறார்கள். அதாவது அலோக் வர்மா அடுத்த ஆண்டு வரை சி.பி.ஐ இயக்குனர் பதவியில் இருக்க முடியும். அதற்கு முன்பாக அலோக் வர்மாவை பதவியில் இருந்து விரட்ட பயன்படுத்தப்பட்டவர் தான் அஸ்தானா என்கிறார்கள்.

சரி எதற்காக அலோக் வர்மா விரட்டப்பட வேண்டும்? இந்த கேள்விக்கான விடை மிகவும் எளிதானது. கடந்த ஆண்டே ஆம் ஆத்மியின் எம்.பியான சஞ்சய் சிங் சி.பி.ஐக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று சஞ்சய் சிங் கேட்டுக் கொண்டிருந்தார். 

இதனை தொடர்ந்து அண்மையில் பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் சி.பி.ஐக்கு சில ஆவணங்களுடன் ரஃபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு புகார் கொடுத்தனர். இந்த புகாரை அடிப்படையாக வைத்து ரஃபேல் ஒப்பந்தம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறையிடம் விளக்கம் கேட்டு அலோக் வர்மா ஒரு கடிதம் எழுதியதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டும் இன்றி ஏற்கனவே சஞ்சய் சிங் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கொடுத்த புகாரையும் அலோக் வர்மா தூசி தட்டியுள்ளார். இந்த நிலையில் தான் அஸ்தானாவுடன் மோதல் ஏற்பட்டு அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதாவது ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க முயன்ற காரணத்தினால் தான் சி.பி.ஐ இயக்குனர் பொறுப்பை அலோக் வர்மா, நாகேஸ்வர ராவிடம் இழந்ததாக கூறுகிறார்கள்.