பிரதமர் மோடி தலைமையில் நாடு அடைந்த முன்னேற்றம்: தேர்தல் பிரசாரத்தில் பட்டியலிட்ட மத்திய அமைச்சர்!
பிரதமர் மோடி தலைமையில் நாடு அடைந்த முன்னேற்றங்கள் குறித்து புதுபள்ளி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பட்டியலிட்டார்
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் கடந்த மாதம் 18ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது புதுப்பள்ளி தொகுதியில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த உம்மன் சாண்டி.
உம்மன் சாண்டியின் கோட்டையான புதுப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் உம்மான் சாண்டியின் மகனான சாண்டி உம்மன் களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் லிஜின் லால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கேஜ் தாமஸ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், புதுப்பள்ளி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கோட்டயம் வருகை புரிந்தார். பிரசாரத்தின் ஒருபகுதியாக புதுப்பள்ளியில் தொழில்முறை பட்டப்படிப்பு மாணவர்களுடன் உரையாடிய அவர், இந்தியாவின் வளர்ச்சி குறித்தும், பிரதமர் மோடி தலைமையில் நாடு அடைந்த முன்னேற்றங்கள் குறித்தும் பேசினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வரை 90 சதவீத செல்போன்கள் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறிய அமைச்சர், 2023ஆம் ஆண்டில் இந்தியா மொபைல் போன்களின் முக்கிய உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
“2014ஆம் ஆண்டில், மொபைல் போன் தொடர்பான எந்த பொருட்கள் நாம் ஏற்றுமதி செய்யவில்லை. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான ஆப்பிள் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள், 2022 நிதியாண்டில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இதுபோன்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது.” என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
“முந்தைய காலங்களில், மக்கள் நம் தேசத்தைப் பற்றி விவாதிக்கும்போது, இந்தியா நல்ல மனிதர்களை கொண்ட ஜனநாயக நாடு என்பார்கள். அதேசமயம், அதன் நிர்வாகம் ஊழல் நிறைந்து செயலற்றதாக இருக்கிறது என கூறுவார்கள். உதாரணமாக 1985ஆம் ஆண்டி ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய அரசு பயனாளி ஒருவருக்கு ரூ.100 அளித்தால், அவருக்கு ரூ.15 மட்டுமே கிடைக்கும். அந்த அளவுக்கு ஊழல் நடைபெற்றது. இது ஆட்சியின் செயலற்ற தன்மையை காட்டியது.” என ராஜீவ் சந்திரசேகர் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டினார்.
ஆனால், 2014 முதல், நமது நாட்டின் உண்மையான தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, 100 ரூபாய் அனுப்பப்பட்டால், பயனாளி அதனை அப்படியே பெறுகிறார். இதுதான் மாற்றம் எனவும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு சாதகமாக 80 சதவீத இந்தியர்கள்: ஆய்வில் தகவல்!
தொடர்ந்து பேசிய அவர், “2014 க்கு முன், இந்தியா தனது ஆயுதப் படைகளையும் பாதுகாப்புத் துறையையும் புதுப்பிக்க பணம் இல்லாமல் இருந்தது. சீனா இந்தியாவைக் கண்காணிப்பதைத் தடுக்க நாம் திராணியற்றவர்களாக இருந்தோம். எல்லையில் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தினால் சீனா வருத்தப்படும் என எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு இல்லாதது குறித்த கேள்விக்கு அன்றைய காங்கிரஸ் பாதுகாப்பு அமைச்சர் மக்களவையில் பதிலளித்தார். நாம் ஆதாரமற்ற மற்றும் வளர்ச்சியடையாத தேசமாக இருந்தோம். ஆனால் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது? இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.” என்றார்.
“ஒவ்வொரு ஆண்டும் நமது பட்ஜெட், வரி மற்றும் மறைமுக வரி வசூலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா வரலாற்று சாதனையை படைக்கிறது. உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்யும் ஒரே நாடாக இந்தியா இருக்கிறது. ஏனெனில் இந்த ஆண்டு மட்டும் அதிநவீன சர்வதேச உள்கட்டமைப்புக்காக ரூ.15 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது நிதி ரீதியாக உறுதியான, பொருளாதார ரீதியாக வலுவான மற்றும் பாதுகாப்பான புதிய இந்தியா. இது ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்கு அவசியம்.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், “2014 க்கு முன்பு இந்தியாவில் 42 கோடி பணியாளர்கள் இருந்தனர். மொத்தம் 31 கோடி இளைஞர்கள் கல்வியறிவு அல்லது திறமையற்றவர்களாக இருந்தனர். இந்தியாவில் நான்கில் மூன்று பேர் கல்வி மற்றும் திறன்கள் இரண்டும் இல்லாமல் இருந்தனர். இருப்பினும், மோடி அரசாங்கத்தின் கடந்த 8 ஆண்டுகளில் 6.5 கோடி இந்திய இளைஞர்கள் திறன் மற்றும் மேம்பாடு உள்ளிட்ட திறன்களைப் பெற்றுள்ளனர்.” என்றார்.
“இந்தியா வலுவாக இருந்தால் இளைஞர்கள் வலுவாக இருப்பார்கள். அதிகாரமளித்தல், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவைகளில் துணிச்சலான அரசியலை நாம் கடைப்பிடிக்க வேண்டும். 65 ஆண்டுகால நிர்வாகத்தில் பிரிவினையும், திசைதிருப்பும், பொருளாதாரச் சிக்கல்களும் இருந்ததைத் தள்ளிவிட்டு, வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறிச் செல்வதை முதன்முறையாக நாம் காணலாம். 'சப்கா சாத் சப்கா விகாஸ் சப்கா விஸ்வாஸ் சப்கா பிரயாஸ்' என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாம் இருவரும் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம்.” என்று அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.