புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில், பயணிகள் ரயில்வேக்குச் சொந்தமான பெட்ஷீட் மற்றும் போர்வைகளைத் திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் ஊழியர் அவர்களைப் அபராதம் செலுத்தக் கூறியதும், இது தவறுதலாக நடந்ததாக வாதிட்டனர்.

டெல்லி - ஒடிசா இடையே இயங்கும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்தவர்கள், ரயில்வேக்குச் சொந்தமான பெட்ஷீட் மற்றும் போர்வைகளை தங்கள் பைகளில் மறைத்து எடுத்துச் சென்றது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடந்தது என்ன?

ரயில் ஊழியர் ஒருவர் பயணிகளின் உடமைகளை சோதிக்கும்போது, அவர்களது பைகளில் இருந்து ரயில்வேக்குச் சொந்தமான போர்வைகள், பெட்ஷீட்கள் மற்றும் துண்டுகள் ஆகியவை வெளியே எடுக்கப்பட்டன.

இதுகுறித்து ரயில் ஊழியர், “ஐயா, இங்கு பாருங்கள், எல்லா பைகளிலும் போர்வைகள் மற்றும் பெட்ஷீட்கள் இருக்கின்றன. துண்டுகள், பெட்ஷீட்கள் என மொத்தம் நான்கு செட்கள் உள்ளன. ஒன்று அவற்றை திருப்பிக் கொடுங்கள் அல்லது ₹780 அபராதம் செலுத்துங்கள்,” என ஒடியா மொழியில் கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

பயணிகள் இது தவறுதலாக நடந்ததாகவும், தங்கள் தாயார் தெரியாமல் பையில் வைத்ததாகவும் தெரிவித்தனர். ஆனால், ரயில் ஊழியர் இதை ஏற்க மறுத்து, "முதல் வகுப்பு ஏசியில் பயணம் செய்யும் நீங்கள் ஏன் திருட வேண்டும்? நீங்கள் புனித யாத்திரை செல்வதாக வேறு கூறுகிறீர்கள்." எனக் கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் (TTE), இந்த விவகாரம் ரயில்வே சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் என எச்சரித்தார். "உங்கள் பிஎன்ஆர் (PNR) எண் என்ன? ஒன்று அபராதம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், போலீஸ் வந்து உங்கள் பிஎன்ஆர் எண்ணின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படும்," என கூறினார். எனினும், பயணிகள் மூன்று பெட்ஷீட்கள் மட்டுமே இருந்ததாகவும், இது ஒரு உண்மையான தவறு என்றும் வாதிட்டனர்.

Scroll to load tweet…

சமூக வலைதளங்களில் கண்டனம்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து, பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். “முதல் வகுப்பு ஏசியில் பயணிப்பது ஒரு கௌரவம், ஆனால் பெட்ஷீட்களை திருடுவது நேர்மையின்மையைக் காட்டுகிறது. பொதுச் சொத்துக்களை மதிக்க வேண்டும்,” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், “இவர்கள் திரும்ப ஒப்படைத்தாலும், இந்த குற்றச் செயலுக்காக அபராதம் விதிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே இது போன்ற நடத்தை மாறும். இது போன்றவர்கள் தேசத்திற்கும், உலகத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள்,” எனக் கூறியுள்ளார். மேலும் சிலர், இந்த பயணிகளின் விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.