இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 1000ஐ கடந்துவிட்டது. 

இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லையென்ற போதிலும், பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் மே 3ம் தேதிக்குள் பாதிப்பு கட்டுக்குள் வர வாய்ப்பில்லை என்பதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து கடந்த திங்கட்கிழமை, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையின்போது கூட, பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தினர். 

எனவே ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ள நிலையில், முதல் மாநிலமாக பஞ்சாப் மாநிலம், ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பது என்று முடிவு செய்துள்ளது. பஞ்சாப்பில் பாதிப்பு பெரியளவில் இல்லை. அங்கு 358 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் முன்னெச்சரிக்கையாக பஞ்சாப் அரசு, கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது. 

இந்த ஊரடங்கு சமயத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறந்திருக்கும் என்றும் அந்த சமயத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.