பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல் விலையில் 92 பைசாவும், டீசல் விலை 88 காசுகளும் உயர்ந்துள்ளன.
இதன் மூலம், அம்மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.98.65 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.95ஆகவும் உயர்ந்துள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.96.20 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.84.26 ஆகவும் இருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், ஆண்டுக்கு ரூ.600 கோடி கூடுதலாக அரசுக்கு வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அம்மாநிலத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
முதல்வர் பகவந்த் மானின் அரசாங்கம் எரிபொருள் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 90 பைசா உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் மூலம் ரூ.300 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
பெண்கள் இலவச பேருந்து பயணம்: கண்டக்டராகும் கர்நாடக முதல்வர்!
இதனிடையே, பெட்ரோல், டீசல் விலையை பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு உயர்த்தியுள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டால், பால், காய்கறிகள், பருப்பு வகைகள், அரிசி, போக்குவரத்து என அனைத்து விலைகளும் குறையும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாகவும், இதுபோன்ற போலியான பேச்சுகள் மூலம் பஞ்சாப் மக்களை ஏமாற்றி ஆம் ஆத்மி அரசு கொள்ளையடிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பெட்ரோல்-டீசல் விலை குறித்து கெஜ்ரிவால் தினமும் பேசி வந்தார். ஆம் ஆத்மி கட்சி ஆளும் மாநிலங்களில் விலை குறையும் என்று அவர் உறுதியளித்தார். இப்போது ஆம் ஆத்மி பஞ்சாபில் வாட் வரியை உயர்த்தி, பெட்ரோல்-டீசல் விலையை அதிகரித்துள்ளது. இலவசங்களுக்காக வாக்களித்தவர்களை ஆம் ஆத்மி இப்படித்தான் தண்டிக்கும் எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
