புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த (சிஆர்சிஎஃப்) 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் நேற்று சென்று கொண்டு இருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. 

அப்போது ஒரு தீவிரவாதி வெடிகுண்டுகாரை ஓட்டி வந்து வீரர்கள் சென்ற பேருந்தில் புகுந்தது. அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்சிஎஃப் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா உடனடியாக டெல்லி திரும்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகப் பெரிய கண்டனத்தை இந்தியா வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை இந்தியா தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. புல்வாமா தாக்குதல் நேற்று முன்தினம் அரங்கேறியதை அடுத்து, இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே சுமார் 20 நாடுகளின் தூதர்களை அழைத்து தீவிரவாத செயல் குறித்து விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.