புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 சிஆர்பிஎஃப் சென்றுக்கொண்டிருந்தனர். புல்வாமா அருகே வந்துக்கொண்டிருந்த போது சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தற்கொலை படைத்தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீர மரணம் அடைந்தனர். 

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதற்கு உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தன. மேலும் உயிரிழந்த சிஆர்பிஎஃப் குழந்தைகளின் கல்வி செலவை தாமே ஏற்பதாக இந்திய வீரர் சேவாக் அறிவித்தார். இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. 

மேலும் இந்திய - திபெத் போலீஸ் விழா தலைநகர் டெல்லியில் நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் விருப்ப நிதி நன்கொடை உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து இந்த தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநில அரசும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.