பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டை அல்லது பள்ளி அடையாள அட்டை இருந்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டை அல்லது பள்ளி அடையாள அட்டை இருந்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து கொரோனாவை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை மக்களுக்கு செலுத்தும் பணி துரிதபடுத்தப்பட்டது. அந்த வகையில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதேநேரம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்நிலையில் மே 1 ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், 12 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறாருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பலவும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தன. ஆனால் இந்தியாவில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் குழந்தைகளுக்கு எப்போது தான் தடுப்பூசி கிடைக்கும் என இந்திய பெற்றோர்கள் ஏங்கி கொண்டிருந்தனர். அந்த ஏக்கத்தை பிரதமர் மோடியின் அறிவிப்பு போக்கியது. ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார். சிறுவர்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தப்படும். கோவிஷீல்டுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இச்சூழலில் ஜனவரி 1ஆம் தேதி முதல் கோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பள்ளி ஐடி கார்டு மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

சிலரிடம் ஆதார் போன்ற அடையாள அட்டைகள் இல்லாமல் இருக்கலாம் என்பதால் இதன் மூலம் பதிவுசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையே காரணமாக வைத்து பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த புதுச்சேரி அரசு தீர்மானித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தினை அணுகி தேவையான கோவாக்சின் தடுப்பூசியை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்குள் 80 ஆயிரம் மாணவர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்தி, தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிகிறது.
