பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பொங்கல்பண்டிகையொட்டி ரூ.490 மதிப்புள்ள 10 பொருட்களுடன் கூடிய தொகுப்பு ரேசன் அட்டைக்காரர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பொங்கல்பண்டிகையொட்டி ரூ.490 மதிப்புள்ள 10 பொருட்களுடன் கூடிய தொகுப்பு ரேசன் அட்டைக்காரர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
‘புதுச்சேரியில் தேசிய இளைஞர் திருவிழா வரும் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் இருந்து 7,500 பேர் இந்நிகழ்வில் பங்கேற்பதாக இருந்தது. அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இந்நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார் என்றும் துணை நிலைஆளுநர் தமிழிசை தெரிவித்திருந்தார். மேலும் இளைஞர் தின விழாவிற்கான லோகோவை புதுச்சேரியில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டப் பேரவை தலைவர் செல்வம் ஆகியோர் வெளியிட்டனர்.
தற்போது கொரோனா, ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் சூழலில் இந்நிகழ்வை புதுச்சேரியில் நடத்த எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் பல மாநிலங்களில் இருந்து 7,500 பேர் புதுச்சேரி வருவதும் அசாதாரண சூழலில் தேசிய இளைஞர் தினவிழா நடப்பதும் கொரோனா பரவலுக்கு வழிவகைக்கும் என்று கூறப்பட்டது. இதுக்குறித்து ஆட்சியர், புதுச்சேரியில் நடைபெறும் தேசிய இளைஞர் தின விழாவை நேரடியாகவா அல்லது இணைய வழி வாயிலாகவா நடத்துவது குறித்து மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. புதுச்சேரிக்கு பிரதமர் வருவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு இதுவரை எந்தவித தகவலும் இல்லை" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில், ஜனவரி 12-ம் தேதி நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் மோடி நேரில் கலந்துக்கொள்ள இருந்த நிலையில், தற்போது அது தடைபட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த தடை நடந்திருப்பதாக தெரிகிறது. நேரில் வரவில்லை என்றாலும், மோடி காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து, புதுச்சேரிக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றிய அறிவிப்பையும் முதலமைச்சர் ரெங்கசாமி வெளியிட்டார். “புதுச்சேரியில் பொங்கல் நிகழ்வையொட்டி, ரூ.490 மதிப்புள்ள 10 பொருட்களுடன் ரேசன் அட்டைக்காரர்களுக்கு பரிசுத்தொகுப்பு தரப்படும்”என்று அறிவித்துள்ளார். இவற்றுடன், புதுவையில் தற்போதுவரை ஆளுநருடன் இணைந்த நிலையே நீடிப்பதாகவும், தங்களுக்குள் எவ்வித முரணும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜனவரி 12 ஆம் தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்க இருந்த ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
