publish the corruption officers list...central infomation commission
ஒவ்வொரு துறையிலும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகளின் பட்டியலை மக்கள்பார்க்கும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தலைமை தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு துறையிலும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி வழக்கைச் சந்தித்து வரும் அதிகாரிகள், ஊழியர்களின் பட்டியலை அரசு வெளியிடக் கோரி, அசோக் குமார் ரெட்டி என்பவர் தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார். 51 முறை இது தொடர்பாக மனுக்கள் அளித்தும் அதில் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ள மத்திய தலைமை தகவல் ஆணையம், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தகவல் ஆணையர் யசோவர்தன் ஆசாத் கூறுகையில், “ ஒவ்வொரு அரசு துறையிலும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள், வழக்கை சந்தித்து வரும் அதிகாரிகள், ஊழியர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். ஆனால், அவர்களின் பெயர்களை குறிப்பிடத் தேவையில்லை.
ஒவ்வொரு ஆண்டும், துறைவாரியாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் பட்டியல், நீதிமன்ற வழக்குகள், விசாரணை, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் உள்ளிட்டவற்றை இணைதளத்தில் வெளியிடவேண்டும்.
இவ்வாறு ஊழல் செய்யும் அதிகாரிகள், குற்றச்சாட்டில் சிக்கி வழக்கை சந்திக்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை மக்கள் பார்க்கும் வகையில் வெளியிடும் போது, ஊழல் செய்ய அச்சப்பட்டு, நிர்வாகம் சிறப்பாக நடக்க உதவும், மக்கள் நலனுக்கான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை’’ எனத் தெரிவித்தார்.
