ஆன்லைன் விளையாட்டால் பலரது வாழ்க்கை பறிபோன நிலையில், இந்தியாவில் இன்று முதல் பப்ஜிக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுவதாக தென்கொரிய நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரையும் மிகக் குறுகிய காலத்தில் அடிமையாக்கிய விளையாட்டு பப்ஜி. குறிப்பாக இளைஞர்கள் எந்நேரமும் இரவு பகல் பார்க்காமல் விளையாட்டிலேயே மூழ்கிக் கிடந்தனர். உலகம் முழுவதும் 60 கோடி முறைகளுக்கும் மேல் பப்ஜி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 கோடி பேர் தொடர்ந்து விளையாட்டை விளையாடி வந்துள்ளனர். இதில், இந்தியாவில் மட்டும் 3.3 கோடி பேர் பப்ஜி பயனர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை, பப்ஜி ஆட்டத்தின் மூலம் அந்நிறுவனத்துக்கு 22,457 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இதனிடையே,  கடந்த செப்டம்பர் 2ம் தேதி முதல் இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியச் சீன எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில்,  100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பப்ஜி என்பது தென்கொரிய வீடியோ கேம் நிறுவனமான ப்ளூ ஹோலுக்கு சொந்தமானது. ஆனால் இதற்கான பதிப்புரிமை சீனாவின் டென்சென்ட்  கேமிங் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ப்ளே ஸ்டோரில் இருந்து மத்திய அரசு நீக்கியிருந்த நிலையில், ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் இன்று முதல் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.