சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த கனகதுர்கா, பிந்து ஆகிய இரு இளம் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2018, செப்டம்பர் 28ம் தேதி வரலாற்று தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, பல்வேறு அமைப்பினைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், சாதாரண பெண்கள் பலரும் முயற்சி மேற்கொண்டும் பலன் கிட்டவில்லை. ஆனால் போராட்டங்களும், வன்முறைகளும் இந்து அமைப்பினரால் கேரளம் முழுவதும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இந்நிலையில், ஜனவரி 2ம் தேதி மலப்புரத்தை சேர்ந்த கனக துர்கா மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணி ஆகிய இருவரும் சன்னிதானத்துக்குள் போய் திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. சிசிடிவி உதவியால் இவர்களது அடையாளம் தெரிந்துவிட்ட நிலையில், இந்து அமைப்புகளின் மிரட்டலுக்கு உள்ளாகினர். இருவருமே வீடு திரும்ப முடியாமல் தலைமறைவாகினர். இந்த நிலையில், சில தினங்கள் முன்பாக வீடு திரும்பிய கனகதுர்காவை அவரது மாமியார் அடித்து துன்புறுத்தியதாக தகவல் வெளியானது.

 

இந்த சம்பவங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மூலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு கவனத்திற்கு, இரு பெண்களும் கொண்டு சென்றனர். இன்று இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இதற்கு மாநில அரசே பொறுப்பு என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பால் ஐயப்ப பக்தர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.