சந்தைக்கு சென்று விட்டு திரும்பும் போது, கலவரம் ஏற்படுவது போன்ற சத்தம் கேட்டு, உடனே தோட்டாக்களால் தாக்கப்பட்டேன் என உயிர் பிழைத்த நபர் தெரிவித்து இருக்கிறார். 

இடைநீக்கம் செய்யப்பட்ட பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபிகள் மற்றும் இஸ்லாமிற்கு எதிராக கூறிய சர்ச்சைக்கு உரிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக படு காயம் அடைந்த சுமார் இருபது பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிகிச்சை பெற்று வருவோரில் ஒருவர் ஆறு முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து ராஜேந்திர மருத்துவ குழும மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்தைக்கு சென்று விட்டு திரும்பும் போது, கலவரம் ஏற்படுவது போன்ற சத்தம் கேட்டு, உடனே தோட்டாக்களால் தாக்கப்பட்டேன் என உயிர் பிழைத்த நபர் தெரிவித்து இருக்கிறார். 

திடீர் துப்பாக்கிச் சூடு:

தான் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை என்றும் சந்தைக்குச் சென்றும் திரும்பும் போது இந்த அசம்பாவிதத்தில் சிக்கிக் கொண்டதாகவும் அந்த நபர் தெரிவித்து உள்ளார். சந்தையில் இருந்து திரும்பிக் கொண்டு இருக்கும் போது பலர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனற் என்றும், போலீஸ் சார்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். தன் மீது ஆறு முறை சுடப்பட்டது, நான்கு தோட்டாக்கள் எடுக்கப்பட்டு விட்டன, இன்னும் இரு தோட்டாக்கள் உடலிலேயே இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். 

வரும் நாட்களில் இவரின் உடலில் இருந்து மற்ற இரு தோட்டாக்களும் எடுக்கப்பட்டு விடும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதே போன்று போராட்டத்தில் கலந்து கொள்ளாத மற்றொரு நபரும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி அவதிப்படுவதாக குற்றம் சாட்டி இருக்கிறார். ராஞ்சியில் ஏற்பட்ட கலவரத்தின் போது இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். 

விசாரணை குழு:

ராஞ்சியில் நடைபெற்ற மோதல் காரணமாக விசாரணை நடத்த ஜார்கண்ட் அரசு சார்பில் இரண்டு பேர் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் மற்றும் கூடுதல் இயக்குனர் சஞ்சய் லடேகார்ம் இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.