பேராசிரியர் சாய்பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது முட்டாள்தனமான செயல்: ஐ.நா.உரிமைகள் நிபுணர்!
பேராசிரியர் சாய்பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது மனிதாபிமானமற்ற, முட்டாள்தனமான செயல் என்று ஐ.நா. உரிமைகள் நிபுணர் சாடியுள்ளார்
டெல்லி பல்கலைக்கழக் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, நக்சல் தலைவர்கள், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு 2014ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜி.என்.சாய்பாபா தவிர பத்திரிகையாளர் ஒருவர், பல்கலைக்கழக மாணவர்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதானவர்களில் ஒருவர் ஏற்கனவே சிறையில் உயிரிழந்து விட்டார்.
இந்த வழக்கில், இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல குற்றங்களுக்காக ஜி.என்.சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் முதுகுத்தண்டு கோளாறு மற்றும் போலியோவால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வலம் வரும் பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் கைதுக்கும், தண்டனைக்கும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி அமர்வு நீதிமன்றம் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த் மும்பை உயர் நீதிமன்றம், ஜி.என்.சாய்பாபா உள்ளிட்டவர்களை விடுதலை செய்தது. ஆனால், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து, நாக்பூர் மத்திய சிறையில் கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் உள்ள சிறை அறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மனித உரிமைப் பாதுகாவலர்களின் நிலைமை குறித்த ஐ.நா.வின் சிறப்பு உறுப்பினர் மேரி லாலர், இந்தியாவில் சிறுபான்மையினரின் நலனுக்காக நீண்ட காலமாக போராடி வந்த சாய்பாபா ஏறக்குறைய பத்தாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறைபாடுகள் உள்ள மனித உரிமை ஆர்வலர் ஒருவரை இந்தியா பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருப்பது மனிதாபிமானமற்ற, முட்டாள்தனமான செயல் என்று ஐ.நா. உரிமைகள் நிபுணர் மேரி லாலர் சாடியுள்ளார். ஜி.என். சாய்பாபாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாய்பாபா தொடர்ந்து சிறை வைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. அவரது கைது விமர்சனக் குரலை அடக்க முயல்வதற்கான அனைத்து விஷயங்களையும் ஒரு நாடு கொண்டிருப்பதை காட்டுக்கிறது எனவும் மேரி லாலர் விமர்சித்துள்ளார். சாய்பாபா மீது வழக்குத் தொடுத்திருப்பது குறித்து பல்வேறு ஐ.நா. உரிமை நிபுணர்கள் கவலை எழுப்பியுள்ளதையும் மேரி லாலர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகளை பலி கொடுக்கவும் காங்., தயங்காது: காவிரி நீர் திறப்புக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
மேரி லாலர் உள்பட மற்ற ஐ.நா உரிமை நிபுணர்கள், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலால் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக அவர்கள் பேசுவதில்லை. தன்னிச்சையாக செயல்படுபவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
“இரண்டு முறை குறுகிய காலத்தில் ஜாமீனில் இருந்ததைத் தவிர, சாய்பாபா நாக்பூர் மத்திய சிறையிலேயே உள்ளார். சிறையில் உள்ள அவரது நிலை கடுமையான கவலைக்குரியது. சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் சாய்பாபா, அவரது நிலைக்கு பொருந்தாத உயர் பாதுகாப்பு சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த சிறிய அறையில் ஜன்னல் கிடையாது. இரும்பு கம்பிகளால் ஆன ஒரு சுவரும் கிடையாது. கோடை வெயிலில் அவரது நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். மாற்றுத்திறனாளி கைதிகள் அணுகக்கூடிய தன்மை, நியாயமான தங்குமிடங்களை வழங்குதல் உட்பட, பாரபட்சம் காட்டப்படுவதில்லை என்பதை சிறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.” என்றும் மேரி லாலர் வலியுறித்தியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டதாகக் கூறிய மேரி லாலர், கைதிகளின் உடல்நலம் மற்றும் கண்ணியத்திற்கான உரிமையை நிலைநிறுத்துவதற்கு நாடுகள் கடமைப்பட்டுள்ளன என்றும் வலியுறுத்தினார். சாயிபாபாவின் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. அவரை கண்டிப்பாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.