காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி வாக்காளர்களுக்கு இலவசமாக ஷூ வழங்கியதை பிரியங்கா காந்தி மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 
உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4-வது முறையாக களம் இறங்கியுள்ளார். அவரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக மத்திய் அமைச்சர் ஸ்மிருதி இராணியை பாஜக களம் இறக்கியுள்ளது. அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகிறது. ராகுலின் சகோதரியும் உ.பி. கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா ராகுலுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில், அமேதி தொகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இலவசமாக ஷூ வழங்கியதாகப் புகார் எழுந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்காளர்களைக் கவரும் வகையில் பாஜக ஷூ வழங்கியதாக காங்கிரஸ் புகார் கூறியது. இந்த விவகாரத்தை பிரியங்கா கண்டித்துள்ளார். அமேதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா, “அமேதி மக்கள், பிச்சைக்காரர்களா? அவர்களுக்கு இலவசமாக ஷூ வழங்கியதன் மூலம் அந்த மக்களை ஸ்மிருதி இராணி அவமதித்துவிட்டார்.


வெளியூர்களிலிருந்து இங்கே வந்து அமேதி மக்களிடம் ஓட்டு பிச்சை கேட்பவர்கள்தான் பிச்சைக்காரர்கள். அமேதி மக்களுக்கென சுய கெளரவம் உள்ளது. ராகுலை அவமதிக்க வேண்டும் என்பதற்காக மக்களுக்கு ஸ்மிருதி இராணி ஷூக்களை வினியோகித்துள்ளார்” என்று பிரியங்கா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.