நாடாளுமன்ற தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துவருகிறது. உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கட்ட பிரியங்கா அந்த மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரிலிருந்து 100 கி. மீ. தொலைவுக்கு பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி சென்றார். செல்லும் வழியில் மிர்சாப்பூரில் திரண்டிருந்த மக்களிடம் பிரியங்கா பேசினார்.


”நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி எதையுமே செய்யவில்லை. இந்த அரசு லாலிபாப்புகளைத்தான் மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது. அரசியல் என்பது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியிலே வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய திட்டமாக மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தை கொண்டு வந்தோம்” என்று பேசினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜனநாயக அமைப்பின் மீதும் பிரதமர் கடந்த 5 ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வந்திருக்கிறார். மக்கள் எல்லாரும் முட்டாள்கள் என்று நினைப்பதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.