பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2-ம் கட்டத் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பரப்புரைகள் மற்றம் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் என அனல் பறந்து வருகிறது.

 

இந்நிலையில் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் எந்த தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்று பிரியங்கா அறிவித்திருந்தார். ரேபரேலி அல்லது அமேதியில் போட்டியிடுவீர்களா என்று பிரியங்காவை செய்தியாளர்கள் கேட்ட போது, ஏன் வாரணாசியில் போட்டியிடக் கூடாதா என்று கூறி தேசிய அரசியலை அதிர வைத்தார். 

இந்நிலையில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தியை நிறுத்த காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் கட்சியின் தலைவர் என்ற முறையில் ராகுலே இறுதி முடிவு எடுப்பார் என காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அலகாபாத் மற்றும் வாரணாசி தொகுதிகளில் காங்கிரஸ் பலம் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்து வருகின்றனர். இவ்விரு தொகுதிகளுக்கும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.