இலவச ரேஷன் திட்டத்தை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா? சர்ச்சையான பிரியங்கா காந்தி பேச்சு!
இலவச ரேஷன் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனுடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த திட்டம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், மேலும் 5 ஆண்டுகளுக்கு பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த இலவச ரேஷன் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ராகுல் காந்தி போட்டியிடும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்த்கில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “5 கிலோ ரேஷன் எதிர்காலத்தை உருவாக்கப் போவதில்லை. இதன் மூலம் நீங்கள் தன்னம்பிக்கை (ஆத்மநிர்பார்) பெற மாட்டீர்கள். வேலைவாய்ப்பா அல்லது 5 கிலோ ரேஷனா என உங்களிடம் நான் கேட்டால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்? நீங்கள் நிச்சயமாக வேலைவாய்ப்பைத் தேர்ந்தெடுப்பீர்கள். அது உங்களை சுயசார்புடையவர்களாக மாற்றும். நமது நாட்டின் கொள்கைகளை உருவாக்கும் கட்சி உங்களை சுயசார்புடையவர்களாக மாற்ற வேண்டும். ஆத்மநிர்பாராக மாற்றக் கூடாது. அத்தகைய கட்சியின் சித்தாந்தம் சரியல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.
பிரியங்கா காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளது. பிரதமர் மோடி அறிவித்த இலவச ரேஷன் திட்டத்தை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ள ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா, பிரியங்கா காந்தியின் கருத்து ஆபத்தானது என தெரிவித்துள்ளர். பிரதமர் மோடியின் 'இலவச ரேஷன்' திட்டத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையில் எதை குறிப்பிட்டு பிரியங்கா காந்தி பேசுகிறார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில அரசின் அலட்சியத்தால் பட்டாசு ஆலை மரணங்கள்: தமிழக பாஜக கண்டனம்!
அதேபோல், இலவசங்களுக்கு எதிராக பிரியங்கா காந்தி பேசியுள்ளதாக பாஜகவினர் பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க இலவசங்களை வாரி இறைத்த கட்சி, இப்போது அதற்கு எதிராக பேசுவதா என பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.