நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் தாக்கத்தை பிரியங்கா ஏற்படுத்துவார் என்று மோடிக்கு தேர்தல் பிரசார உத்திகளை வகுத்துகொடுத்த பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.  

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “அரசியலில் முழு நேரம் இறங்க பிரியங்கா முடிவு செய்திருப்பதாகவே தற்போது தெரிகிறது. அப்படி அரசியலில் பிரியங்கா முழு நேரம் இறங்கி விட்டால் உத்தரப்பிரதேசத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் மாற்றத்தை அவரால் ஏற்படுத்த முடியும். ” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார். 

அதே வேளையில் ராகுலுடன் பிரியங்காவை ஒப்பிட முடியாது என்றும் பிரசாந்த் தெரிவித்திருக்கிறார். “ பிரியங்காவை ராகுலுடன் ஒப்பிட கூடாது. ராகுல் ஏற்கனவே 20 ஆண்டுகளாக அரசியலில் உள்ளார். பிரியங்கா அரசியலில் இறங்காமல் இருந்தாலும், முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த பிரியங்கா உதவி செய்திருக்கிறார்” என்று பிரசாந்த் தெரிவித்திருக்கிறார். 

குஜராத்தில் 2012 சட்டப்பேரவைத் தேர்தலிலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பாளராக பிரசாந்த் கிஷோர் இருந்தார். இந்த இரு தேர்தல்களிலும் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. பிரியங்கா பற்றிய அவரது மதிப்பீடு காங்கிரஸாரை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது.