உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாரணாசிக்கு மட்டும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாததால், அங்கே பிரியங்கா போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.


உ.பி.யில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் 11 அன்று 8 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், மே 12 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் ஏப்ரல் 26 அன்று மோடி வேட்புமனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உ.பி.யில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. ஆனால், வாரணாசி தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.
வாரணாசியில் மோடிக்கு எதிராக கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா போட்டியிடக் கூடும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. தற்போது வாரணாசிக்கு மட்டும் பெயர் அறிவிக்கப்படாததால், அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.


‘மோடியை எதிர்த்து போட்டியிடும் வாரணாசி வேட்பாளரின் பெயர் குறித்து நேரத்தில் வெளியிடப்படும்’ என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வாரணாசியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று அக்கட்சித் தொண்டர்கள் பிரியங்காவை தொடர்ந்து வலியுறுத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.