கர்நாடகாவில் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்த மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சில அரசு ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளில், குறிப்பாக ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மாநில அரசுக்கு தெரியவந்தது. இந்த நிலையில் தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிரியங்க் கார்கே எச்சரித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் வேலை காலி
இனிமேல் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர் கடுமையாக எச்சரித்தார். இது தொடர்பாக கர்நாடக தலைமை செயலகமான விதான் சவுதாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்க் கார்கே, ''மாநிலத்தில் கர்நாடக சிவில் சர்வீஸ் விதிகள் அமலில் உள்ளன.
அரசு ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடக்கூடாது என்று தெளிவான விதி உள்ளது. ஆனாலும், நேற்று முன்தினம் சிலர் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். எங்கள் துறையிலும் சிலர் சென்றுள்ளனர்'' என்று அதிருப்தி தெரிவித்தார்.
சட்டப்படி நடவடிக்கை
தொடர்ந்து பேசிய பிரியங்க் கார்கே, ''ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அரசு அதிகாரிகள் குறித்து அறிக்கை கேட்டுள்ளேன். அந்த அறிக்கை வந்தவுடன் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்வேன். இந்த விஷயத்தை நான் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைப்பேன்'' என்றார்.
ஆர்எஸ்எஸ்ஸை மட்டும் நான் குறி வைக்கவில்லை
பள்ளி-கல்லூரிகள் மற்றும் அரசு வளாகங்களில் இதுபோன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை தடை செய்வது குறித்து பேசிய கார்கே, 'நான் எப்போதும் ஒரே அமைப்பு (ஆர்எஸ்எஸ்) என்று சொல்லவில்லை. இதுபோன்ற எந்த அமைப்பாக இருந்தாலும், அவர்கள் அரசு ஊழியர்களையோ அல்லது அரசு சொத்துக்களையோ தவறாகப் பயன்படுத்தக்கூடாது' என்று விளக்கம் அளித்தார்.
முன்பே உத்தரவு உள்ளது
இதுகுறித்து முன்னரே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன என்பதை கார்கே நினைவு கூர்ந்தார். "2012-லேயே ஒரு உத்தரவு உள்ளது. ஜெகதீஷ் ஷெட்டர் முதலமைச்சராக இருந்தபோது, 'பள்ளிகளில் இதுபோன்றவர்கள் பங்கேற்கக்கூடாது' என்று உத்தரவிட்டிருந்தார். ஏற்கெனவே பல துறைகள் உத்தரவிட்டுள்ளன.
இன்று குறைபாடுகள் உள்ளன. அதனால்தான் இவர்கள் அனைவரும் வளர்ந்துள்ளனர். சர்தார் படேல், இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்யவில்லை என்று சிலர் சொல்வதற்கு பதிலளித்து, 'ஆம், அன்று திரும்பப் பெற்றது சரியல்ல என்றுதான் நாங்கள் சொல்கிறோம்' என்று தனது நிலைப்பாட்டை அமைச்சர் தெளிபடுத்தினார்.
அரசு ஊழியர்கள் நன்கொடை
அரசு ஊழியர்கள் நன்கொடை வசூலிப்பது குறித்து எச்சரித்த கார்கே, ''அதிகாரப்பூர்வமாக நன்கொடை கொடுங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானே இந்த பிரச்சினையை எழுப்பியிருந்தேன். குருபூர்ணிமாவின் போது பிடிஓ-க்களிடமிருந்து ₹ 2 ஆயிரம் வரை பணம் பெற்றிருந்தனர்.
நீங்கள் உங்கள் தனிப்பட்ட பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் நன்கொடையாக கொடுங்கள். ஆனால், அரசின் பணத்தை கொடுக்காதீர்கள். அரசு அதிகாரிகள் அரசின் பணத்தை வீணாக்க கூடாது'' என்றார்.
அரசியல் ஆதாயத்துக்கு இந்துத்வா
தொடர்ந்து இந்துத்துவா குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரியங்க் கார்கே, ''இந்துத்துவாவை யார் கொண்டு வந்தது? சாவர்க்கர்தானே இந்துத்துவாவை கொண்டு வந்தது? முதலில் அனைவரும் இந்து என்றுதான் இருந்தது. இவர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இந்துத்துவாவை கொண்டு வந்துள்ளனர். சில விஷயங்களில் நான் நம்புவதில்லை. எங்கள் தாய் நம்புகிறார். ஆனால், எனது நம்பிக்கை மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது'' என்று கூறினார்.
