மும்பை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான தனியார் விமானம்: 8 பேர் காயம்!
மும்பை விமான நிலையத்தில் சிறிய ரக தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்
கனமழை காரணமாக, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஒரு சிறிய ரக விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. அதில், பயணம் செய்த எட்டு பேரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து மாலை 5 மணிக்கு நடந்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஓடுபாதைகளும் சிறிது நேரம் மூடப்பட்டன. அதில் ஒரு ஓடுபாதை மட்டும் மாலை 6.45 மணியளவில் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதன் காரணமாக, மும்பை விமான நிலையத்துக்கு வந்த 9 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. ஒரு விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி: பவன் கல்யாண் அறிவிப்பு!
விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லியர்ஜெட் 45 விமானம் VT-DBL, விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பை வந்தபோது, மும்பை விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு பணியாளர்களும் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்றபோது கனமழை பெய்ததாகவும், அந்த சமயத்தில் பார்வை தூரம் 700 மீட்டர் அளவிலேயே இருந்ததாகவும் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.