Asianet News TamilAsianet News Tamil

ரோஹிங்கியா முஸ்லிம்களால்  பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை

Prior to the Rohingya refugees from Myanmar the central government should keep in mind the countrys security.
Prior to the Rohingya refugees from Myanmar the central government should keep in mind the countrys security.
Author
First Published Sep 30, 2017, 7:02 PM IST


மியான்மரில் இருந்து அகதிகளாக வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை ஏற்கும் முன் நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து மத்திய அரசு செயல்பட வேண்டும், அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம்

மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது- 

வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வரும் குடியேறிகளால் நாம் பிரச்சினைகளை சந்தித்து வரும் போது, இப்போது, மியான்மரில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுகிறார்கள். 

மியான்மர் நாட்டில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களிலும், பிரிவினைவாதி செயல்களிலும், தீவிரவாத குழுக்களுடனும் தொடர்ந்து ஏற்படுத்தி இருந்ததால், ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து துரத்தப்படுகின்றனர். 

இவர்களை நாட்டுக்குள் நாம் சேர்ப்பதால், உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பில் போட்டி ஏற்படுவதோடு, நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து மத்திய அரசு எந்த முடிவு எடுக்க இருந்தாலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்பதை மனதில் வைத்து எடுக்க வேண்டும்.  அவர்களை ஏற்றுக்கொண்டால், நிச்சயம் நாட்டின் பாதுகாப்புக்கும், ஒற்றுமைக்கும் பாதிப்பு ஏற்படும். 

பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசு குண்டர்களால் மக்கள் கொல்லப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியது. அதேசமயம், பசுக் கடத்தல்காரர்களால் ஏராளமான மக்களும் கொல்லப்படுகிறார்கள். பசு பாதுகாப்பு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது. பசுக்களை பாதுகாக்கும் பணியில் ஏராளமான முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து வருகின்றனர். 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பிரச்சினைகளால் கடந்த 1990களில் அங்கிருந்த பூர்வீக குடிகள் வெளியேற்றப்பட்டனர் , மீண்டும் அவர்களை குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, பழைமையான முறைகள் மாற்றப்பட வேண்டும். 

டோக்லாம் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் எதிராக மத்திய அரசு கையாண்ட வழிமுறைகள், வலிமையான நடவடிக்கைகள், தீர்மானமான நிலைப்பாடு பாராட்டுக்கு உரியது. எல்லைப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளையும் மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவது, நமது வலிமையை காட்டுகிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் நிலை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்காளத்திலும், கேரளா மாநிலத்திலும் நடக்கும் சம்பவங்கள் அனைவரும் அறிவோம். தேசவிரோத சக்திகளுக்கு எதிராக அந்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. அந்த மாநில அரசுகளும், அவர்களின் அரசியல் ரீதியான நிர்வாக முறைகள் உணர்வுப்பூர்வமாக இல்லை,நாட்டின் பிரச்சினைகளை  பற்றி கவலைப்படவும் இல்லை. சிறிய அரசியல் நலனுக்காக தேச விரோத சக்திகளுக்காக உதவுகிறார்கள். 

நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்நிறுவனங்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியோரின் நலன் பராமரிக்கப்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரத்துக்கும், வளர்ச்சிக்கும் அவர்கள் அதிகமான பங்களிப்பை அளிக்கிறார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios