சர்வதேச புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை செல்கிறார். தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மாகாணத்துக்கு செல்லும் அவர் அங்கு புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர், கவுதம புத்தர் பிறந்த நாளை ‘வேசக்’ என்ற புனித நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். புத்தர் பிறந்தநாளாகவும், ஞானம் பெற்று முக்திப் பேற்றினை எய்திய தினமாகவும், புத்த மதத்தினரின் புத்தாண்டாகவும் ‘வேசக்’ தினம் கருதப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த தினம் `புத்த பூர்ணிமா' என்று அழைக்கப்படுகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டின் வேசக் தினத்தையொட்டி வரும் 12-ம் தேதியில் இருந்து 14-ம் தேதிவரை புத்தமதம் தொடர்பான மாபெரும் சர்வதேச மாநாடு ஒன்றை புத்த மதத்தினர் அதிகமாக வாழும் இலங்கையில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்தது.

புத்த மதத்தவர்கள் பரவலாக வாழ்ந்துவரும் 100-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த 400 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை தலைமையேற்று தொடங்கி வைப்பதற்காக இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார்.

கண்டி நகர்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், மத்திய மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் கண்டி நகருக்குச் செல்லும் மோடி, அங்கு இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

அங்குள்ள தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டி நகரில் உள்ள கதிர் காமர் ஆலயத்தில் வழிபாடு செய்யும் மோடி, வெள்ளிக்கிழமை இரவு டெல்லி திரும்புகிறார். அவரது வருகையையொட்டி தலைநகர் கொழும்பு, கண்டி மற்றும் மத்திய மாகாணத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.