இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மூன்றாம் கட்டமாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24லிருந்து ஏப்ரல் 14ம் தேதி வரை முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பின்னர் மே 3ம் தேதி வரையும் அதன்பின்னர் மே 17ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கால் மக்கள் வருவாயின்றி தவித்த நிலையில், அரசாங்கங்களும் வருவாயை இழந்து திணறின. எனவே தற்போது அமலில் இருக்கும் மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் ஊரடங்கு தளர்வு குறித்தும், ஒவ்வொரு கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரும் முன்னரும், பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்று, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. கொரோனா இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து பிரதமர் மோடி, நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த ஆலோசனையில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது வாபஸ் வாங்குவதா? நீட்டிப்பது என்றால், இன்னும் என்னென்ன மாதிரியான தளர்வுகளை செய்யலாம்? என்பது குறித்தும் மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் மாநிலங்களில் கொரோனாவின் நிலை மற்றும் தீவிரம் ஆகியவை குறித்தும் ஆலோசித்துவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடலாம் என்று தெரிகிறது.