இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 ஆயிரத்தை கடந்துவிட்டது. கொரோனாவிற்கு 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. 

கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிப்பதுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணிகளையும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்துவருகின்றன. 

இதற்கிடையே, டெல்லி நிஜாமுதீன் தப்லீகி ஜமாத் கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்களில் நிறைய பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பதுடன், அவர்களுடன் தொடர்பிலிருந்து கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளை தமிழக அரசு உட்பட அனைத்து மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா ஊரடங்கால் சமூக பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியது. ஏழை, எளிய மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள், சிறு குறு வணிகர்கள், பெரிய தொழிற்துறையினர் என அனைத்து தரப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களாவது சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அதேவேளையில் ஊரடங்கால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அனைத்து மாநில முதல்வர்களிடமும் இன்று கொரோனா பாதிப்பு நிலை, நடவடிக்கைகள் குறித்து வீடியோ காலில் கேட்டறிந்த பிரதமர் மோடி, நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு சில தகவல்களை வீடியோ மூலம் பகிரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஏற்கனவே 2 முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாளை காலை 9 மணிக்கு வீடியோ மூலம் முக்கியமான தகவல்களை பகிரவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் பிரதமர் மோடி முக்கியமான அறிவிப்பை வெளியிட வாய்ப்பிருக்கிறது என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே எகிறியுள்ளது.