நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மரணமடைந்த எம்.பி.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இதில் 5 நிமிடங்கள் முன்னதாகவே பிரதமர் மோடி மக்களவைக்கு வந்துவிட்டார். பின்னர் எதிர்க்கட்சி வரிசைக்கு நடந்து சென்ற அவர், முன்பகுதியில் அமர்ந்திருந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரிடம் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கை கூப்பி அவர் வாழ்த்து கூறினார். கார்கே மற்றும் யாதவிடம் மோடி சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோருக்கும் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக மோடி கை கூப்பி வாழ்த்து தெரிவித்தபடி அவைக்குள் நுழைந்தார். அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். லோக் ஜனசக்தி உறுப்பினர் ராமச்சந்திர பஸ்வான் மரியாதை நிமித்தமாக மோடியின் கால்களைத் தொட்டு வணங்கினார்.