இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 2014ம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பேற்றதிலிருந்து உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்தினார். குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவையும், இந்தியாவின் மீதான அந்நாடுகளின் பார்வையையும் உயர்த்தியவர் பிரதமர் மோடி.

அந்தவகையில், அந்த உறவையும் நட்பையும் மதிப்பையும் தொடர்ந்துவரும் பிரதமர் மோடி, இன்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், இந்தியா - பிரிட்டன் இடையேயான உறவையும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் உறவு மற்றும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து பேசியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான உரையாடலுக்கு பிறகு, அதுகுறித்து டுவீட் செய்துள்ள பிரதமர் மோடி, எனது நண்பரான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான உரையாடல் மிகச்சிறப்பானதாக அமைந்தது. இந்தியா - பிரிட்டன் இடையேயான அடுத்த பத்தாண்டுக்கான உறவுக்கான திட்டமிடலாக அமைந்தது. வர்த்தகம்&முதலீடு, பாதுகாப்பு, காலநிலை மாற்றம், கொரோனாவை எதிர்கொள்ளுதல் ஆகிய விவகாரங்களில் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டதாக தனது டுவீட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.