நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ம் தேதி பதவி ஏற்றக்கொண்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 31-ம் தேதி கூடிய மத்திய அமைச்சர்கள் முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ம் தேதி கூட்ட முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி முதல்முறையாக நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் முதல் முறையாக கூடியது. இதற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, அவர் பேசுகையில் எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் கவனத்துடன் கேட்போம். மக்களவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் அதிகம் பெண்கள் உறுப்பினர்கள் தற்போது வந்துள்ளனர். 

மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும். எதிர்கட்சியினர் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்கட்சி மிகவும் முக்கியமானது. அதன் மதிப்பை நாங்கள் அறிவோம். வலுவான எதிர்கட்சி ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம். குறைவான எண்ணிக்கையில் எதிர்கட்சியினர் இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவர்களின் உணர்வை மதிப்போம் என தன்னடக்கத்துடன் பிரதமர் மோடி பேசியுள்ளார்.