மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அமைச்சரவையில் செப்டம்பர் முதல்வாரத்தில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெங்கையா நாயுடு வகித்து வந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை ஸ்மிருதிஇரானியிடமும், நகர ேமம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் நரேந்திர தோமரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின், வெங்கையா நாயுடு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த ராஜினாமாவை உடனடியாக ஜனாதிபதிபிரணாப் ஏற்றுக்கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மத்திய அமைச்சர் அணில் மாதவ் தவே இறந்ததால், அவர் வகித்து வந்த சுற்றுச்சூழல் துறை ஹர்சவர்த்தனிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக பொறுப்பு ஏற்கச் சென்றதால், அவர் வகித்து வந்த பாதுகாப்புதுறை நிதி அமைச்சர் ஜெட்லியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

இதனால், மிகப்பெரிய பாதுகாப்பு துறைக்கு தனியாக அமைச்சர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீன-இந்தியா எல்ைல பிரச்சினையை திறம்பட கையாளமுடிவில்லை என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால், முக்கிய துறைகளை மூத்த அமைச்சர்கள் சிலரே வகித்து வருகின்றனர்.

இதற்கிடையே இன்னும் பா.ஜனதா அரசு தனது ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ய 2 ஆண்டுகள் காலமே இருக்கிறது. இந்த சூழலில் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு அமைச்சர் வழங்கி, திறம்பட துறைகளை கவனிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மேலும், அடுத்த ஆண்டு குஜராத், கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. அதில் பா.ஜனதா கட்சிஆட்சியைப் பிடிக்கும் வகையில், அதன் அடிப்படையில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம். மேலும், தற்போது அமைச்சரவையில் சிறப்பாகச் செயல்படக்கூடிய அமைச்சர்களுக்கு கேபினெட் அமைச்சர் பதவியும், சிறப்பாகச் செயல்படாத அமைச்சர்கள் நீக்கப்பட்டு  இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

இதற்கிடையே கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மற்றும் 2016ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின் அமைச்சரவையில் மாற்றம் எதையும் பிரதமர் மோடி செய்யவில்லை. கடைசியாக செய்யப்பட்டபோது, 19 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதனால், பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, மற்ற கூட்டணி கட்சித் தலைவர்கலுடன் கலந்து ஆலோசித்து   அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.

தற்போது மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி உள்ளிட்ட 73 அமைச்சர்கள் உள்ளனர். அரசியலமைப்புசட்டத்தின்படி, அவையில் உள்ள உறுப்பினர்களில் 15சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் 82 அமைச்சர்கள் வரை அமர்த்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.