இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளையும் சிகிச்சை பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. 

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் ஈடுபட்டுள்ளனர். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவினால் பாதிப்புகளும் இழப்புகளும் பெரியளவில் இருக்கும். எனவே சமூக தொற்றாக மாறுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. 

ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மேலும் கூடுதலாக 19 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும் கூட, நாட்டின் நலனுக்காக இந்த கஷ்டத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்து ஊரடங்கை பின்பற்றிவருகின்றனர். 

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் அவ்வப்போது உரையாற்றி வருகிறார். பிரதமரின் அனைத்து வேண்டுகோள்களையும் ஏற்று மக்கள் பின்பற்றிவருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக கொரோனா இருளை போக்கும் வகையில், வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏற்றச்சொன்னார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நாட்டு மக்கள் தங்கள் ஒற்றுமையை காட்டினர். 

இந்நிலையில், தற்போது டுவீட் செய்துள்ள பிரதமர் மோடி, கொரோனா வைரஸ், ஜாதி, மதம், மொழி, இனம் என்ற வேறுபாடெல்லாம் பார்க்காமல், எல்லைகளை கடந்த பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.