Prime Minister Narendra Modi has written a foreword to Hema Malinis biography.
நடிகை ஹேமா மாலினியின் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளார்.
நடிகை, பரதநாட்டிய கலைஞர், அரசியல்வாதி,இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிணாமங்களை வகித்து வருபவர் ஹேமா மாலினி. 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி இவர் பிறந்தார்.
தமிழகத்தின் ஒரத்தநாடு அம்மன் குடியை சேர்ந்தவரான இவர், 1960 ஆம் ஆண்டிலேயே திரையுலகில் அறிமுகமானார்.
பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கனவுக்கன்னியாக வலம் வந்தார். 40 ஆண்டு கால திரையுலக வரலாற்றில் 150 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்து 2003 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியலில் கால் பதித்தார்.
சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை 11 பெற்று சாதனை படைத்த ஹேமா மாலினி, பத்மஸ்ரீ, கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது உத்திரபிரதேசத்தின் மதுரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் அவரது அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றினை, அவரது அனுமதியுடன் 'ஸ்டார் டஸ்ட்' இதழின் முன்னாள் ஆசிரியரும் தயாரிப்பாளருமான ராம் கமல் முகர்ஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதத் துவங்கினார்.
'பியாண்ட் தி ட்ரீம் கேர்ள்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகமானது ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது .தற்பொழுது முழுமையாக நிறைவடைந்து புத்தகம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் இந்த புத்தகம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த புத்தகத்தின் முன்னுரையை பிரதமர் மோடி எழுதியுள்ளது தெரியவந்துள்ளது.
ஹேமா மாலினியின் 69-ஆவது பிறந்த நாளும், திரை உலகில் அவரது 50-ஆவது ஆணடு நிறைவும் இணைந்து வருவதால் வரும் அக்டோபர் 16 ஆம் தேதியே நூலை வெளியிட பதிப்பகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
