அசாம் முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான தருண் கோகோய் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடல் நலக் குறைவால் காலமானார். அசாம் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் ஆன தருண் கோகோய் உடல் நலக் குறைவால் கவுகாத்தியில் உயிரிழந்தார். கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

மறைந்த தருண் கோகோய்க்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி பதிவிட்ட டுவீட்டில், ஸ்ரீ தருண் கோகோய் ஜி பிரபலமான அரசியல் தலைவர் மட்டுமல்லாது மிகச்சிறந்த நிர்வாகியும் கூட. அசாம் மாநில அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் மிகச்சிறந்த அனுபவம் கொண்டவர். தருண் கோகோயின் குடும்பம் மற்றும் ஆதரவாளர்களுக்கு இந்த சோகமான தருணத்தில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் மூத்த தலைவரான தருண் கோகாய், 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 15 ஆண்டுகள் அசாம் மாநில முதல்வராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.