சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் அதிவேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. சீனா, இத்தாலி, ஈரானில் கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்குகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மூவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் தினந்தோறும் 25-30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா வைரஸ் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறிவது முதற்கட்டம். அவர்களிடமிருந்து அவர்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரவுவது இரண்டாவது கட்டம். அவர்களிடமிருந்து பொது சமூகத்திற்கு பரவுவது மூன்றாவது கட்டம். அப்படி பொதுச்சமூகத்திற்கு பரவிவிட்டால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படக்கூடும். இதில் நாம் இப்போது இரண்டாவது கட்டத்தில் இருப்பதால், தற்காத்துக்கொண்டால், கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம்.

இந்நிலையில், கொரோனா குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக வரும் 22ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மக்களுக்காக மக்களே சோதனை ஊரடங்கை பின்பற்ற வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா நம்மை ஒன்றும் செய்யாது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். மிகுந்த கவனத்துடன் ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் தேவையின்றி மக்கள் குவிய வேண்டாம். ஏனெனில் ஏற்கனவே கொரோனாவுடன் மருத்துவத்துறையும் மருத்துவர்களும் போராடிவரும் நிலையில், பொதுமக்கள் மருத்துவமனைகளில் அதிகமாக குவிந்து, வேலைப்பளுவையும் அழுத்தத்தையும் அதிகரிக்க வேண்டாம்.

எந்தவிதமான தொற்றுக்கும் யாரும் ஆளாகாதீர்கள். யாருக்கும் தொற்றை பரப்பியும் விட்டுவிடாதீர்கள். அதேபோல, பயந்துபோய், பொருட்களையோ மருந்துகளையோ வாங்கிக்குவிக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.