Prime Minister Modis visit to the countrys first sea flight

நாட்டின் முதல் கடல் விமானம் குஜராத்தில் உள்ள சபர்மதி நிதியில் இருந்து தரோய் அணை வரை நேற்று இயக்கப்பட்டது. இந்த கடல் விமானத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி அதில் பயணம் செய்தார்.

இதன் மூலம் கடல் விமானத்தில் பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் மோடி எனும் பெருமையைப் பெற்றார்.

2-ம் கட்ட வாக்குப்பதிவு

குஜராத் மாநிலத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 9 ந்தேதிமுடிந்தநிலையில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (14ந்தேதி) நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிந்தது.

கடல்விமானம்

இந்நிலையில், பனாஸ்கந்தா நகரில் உள்ள அம்பாஜி கோயிலில் சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி நேற்று திட்டமிட்டு இருந்தார். இதற்காக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து தரோய் அணைக்கு கடல் விமானத்தில் பயணித்தார்.

கடல் விமானம் என்பது கடல், ஆறு அல்லது நீர் நிலைகளில் சிறிது தூரம் சென்று பறக்கவும், தரை இறங்கவும் திறன் படைத்ததாகும்.

ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ‘குவெஸ்ட் கோடியாக்’ கடல் விமானத்தில் 9 முதல் 15 பயணிகள் வரை பயணிக்க முடியும். கடலில் அல்லது நீர் நிலைகளில் 300 மீட்டர்வரை சென்று கடல்விமானம் பறக்கும்.

டுவிட்டர்

இந்த கடல் விமானத்தில் பறக்கும் முன், பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ நாளை காலை 9.30 மணிக்கு அகமதாபாத் நகரில் சபர்மதி நதியில் இருந்து தரோய் அணை வரை கடல் விமானத்தில் பயணிக்க இருக்கிறேன். அதன்பின், அம்பாஜியில் உள்ள அம்மா கோயிலில் சாமி தரிசனம் செய்கிறேன். எங்கள் அரசில் விமானம், சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தி வருகிறோம். அனைத்தும் 125 கோடி மக்களுக்காகத்தான்’’ எனத் தெரிவித்தார்.

சாமி தரிசனம்

கடல் விமானத்தில் சென்ற பிரதமர் மோடி, அம்பாஜி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்துவிட்டு, மீண்டும் அதே கடல் விமானத்தில் அகமதாபாத் நகரத்துக்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்தார். 

வரலாற்று முக்கியம்

பிரதமர் மோடியின் பயணம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், “ பிரதமர் மோடி கடல்விமானத்தில் பயணம் செய்தது வரலாற்று சிறப்பான நாளாகும். மிகப்பெரிய ஆற்றல் நிறைந்த இந்தியாவின் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய புரட்சியை இந்த கடல்விமானம் ஏற்படுத்தும்’’ என்று தெரிவித்தார்.

ஜப்பான் தயாரிப்பு விமானம் 

ஜப்பானில் உள்ள செட்டோச்சி ஹோல்டிங் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதன் விலை ரூ.4 கோடி. இந்த விமானத்தின் வெள்ளோட்டம், சமீபத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ ஆகியோர் முன்னிலையில் பார்க்கப்பட்டது. இந்த கடல் விமானப் பயணத்தை பல்வேறு நகரங்களில் அறிமுகப்படுத்த ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 விமானங்களை கொள்முதல் செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.