எங்களுடன் அமைதிப்பேச்சை மீண்டும் தொடங்க நாங்கள் மட்டும் அமைதிப்பாதையில் வந்தால் போதாது, பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் மாநாடு

டெல்லியில் சர்வதேச அளவிலான 3 நாள் ‘புவி அரசியல் மாநாடு’ நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர்கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது-

அமைதி வழி

எங்களுடைய நோக்கம், அண்டை நாட்டின் (பாகிஸ்தான்) பயணம் அமைதி வழியிலும், ஒட்டுமொத்த தெற்கு ஆசியாவிலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். அதற்காகத்தான் எனது பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களையும் அழைத்து இருந்தேன்.

கைவிட வேண்டும்

அந்த நோக்கத்திற்காகவே, நான் லாகூர் நகருக்கு பயணம் செய்தேன். ஆனால், அமைதி வழியில் இந்தியா மட்டும் பயணம் செய்ய முடியாது. அந்த பயணத்தில் பாகிஸ்தானும் இருக்க வேண்டும். இந்தியாவுடனான அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட்டு, கண்டிப்பாக வர வேண்டும். 

தீவிரவாதத்தை ஆதரித்து; வெறுப்பு உணர்வை பரப்பும்; தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும்; எங்களின் அண்டைநாடு தனிமைப்படுத்தப் படவேண்டும், ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் என்றார். 

வாய்ப்புகள்

இந்தியா-சீனா இடையிலான உறவு குறித்து மோடி பேசுகையில், “ இந்தியா-சீனா நாடுகளுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார ரீதியாக வளரும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் பாராட்டி, முன்னோக்கி செல்ல வேண்டும். ஆசியாவில் மிகப்பெரும் வலிமைபடைத்த இரு நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் வளருவது வழக்கத்துக்கு மாறானது அல்ல. 

மதிப்பு அவசியம்

ஆசியப் பிராந்தியத்தில் அமைதியும், வளர்ச்சியும் சிறக்கவும், நட்புறவுகளை மேம்படுத்தவும் இரு நாடுகளும் பரஸ்பரம் நட்பு பாராட்டி, இருதரப்பு உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரச்சினைகளில் துணைநின்று, நலன்களில் அக்கறை செலுத்துவது அவசியம்'' என்றார். 

ஒத்துழைப்பு தொடரும்

அமெரிக்கா-இந்தியா உறவு குறித்து மோடி பேசுகையில், “ கடந்த 2½ ஆண்டுகளாக அமெரிக்கா,ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய வளர்ந்த நாடுகளுடன் நாங்கள் சிறந்த நட்புணர்வை கொண்டு இருக்கிறோம். இந்தியாவின் பொருளாதார, அரசியல் எழுச்சி பிராந்திய அளவில், சர்வதேச அளவில் பெரிய முக்கியத்துவத்தை அளித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபருடன் இந்தியாவின் நட்புறவும், பாதுகாப்பு ரீதியான கூட்டுறவும், ஒத்துழைப்பும் தொடரும்'' என்றார். 

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பு

இந்தியாவின் கடற்சார் நலன்கள் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “ இந்தியாவின் கடற்சார் நலன்கள், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். குறிப்பாக இந்தியப்பெருங்கடல் பகுதியில் அமைதியும், வளர்ச்சியும், பாதுகாப்பும் இருக்கும் வகையில் நாங்கள் பராமரிக்கிறோம். சர்வதேச சட்டங்களை மதித்து அனைத்து நாடுகளும் ஒன்றாகச் செயல்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு கடற்பகுதியில் தடையில்லாத கண்காணிப்பு, அமைதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்திய-பசிப் பெருங்கடல் பகுதிக்கு அவசியமாகும்.

ஆசிய பசிபிக் பகுதியில் ராணுவத்தின் பலம் அதிகரிப்பு, வளங்கள், இயற்கை வளங்கள் அதிகரிப்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டாக்கி இருக்கின்றன. ஆதலால், இந்த பிராந்தியத்தில் வெளிப்படையான, நடுநிலையை உள்ளடக்கிய பாதுகாப்பு கட்டுமானம் திறக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.