சுமார் 50 நிமிடங்கள் நீடித்த இந்த தொலைபேசி அழைப்பில் உக்ரைன் - ரஷ்யா போர் பற்றி பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.

உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று 2-வது முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 35 நிமிடங்கள் நீடித்ததாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களும் உக்ரைனில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நேரடி உரையாடல் தொடர்வது குறித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு உதவிகரமாக இருந்ததற்கு பிரதமர் மோடி, உக்ரைன் அதிபருக்கு பாராட்டு தெரிவித்தார். சுமியில் இருந்து இந்தியர்களை மீட்க உக்ரைன அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த இந்த தொலைபேசி அழைப்பில் உக்ரைன் - ரஷ்யா போர் பற்றி பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. உக்ரைனில் உருவாகி வரும் சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். உக்ரைன் மற்றும் ரஷ்ய அணிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் நிலை குறித்து பிரதமர் மோடியிடம் அதிபர் புதின் விளக்கினார்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் நேரடியாகப் பேச்சு நடத்த வேண்டும் என்று அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். சுமி உட்பட உக்ரைனின் சில பகுதிகளில் போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான வழித்தடங்களை நிறுவியதை பிரதமர் மோடி பாராட்டினார். சுமியில் இருந்து இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற அனைத்து ஒத்துழைப்பையும் பிரதமர் மோடிக்கு அதிபர் புடின் உறுதியளித்தார்.