இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக எனது அரசும், இந்திய மக்களும் இருக்கிறார்கள். தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கும். சிங்களர்களும், தமிழர்களும் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பல்நோக்கு மருத்துவமனை

இலங்கையின் மத்திய மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் டிக்கோயா நகர் ஆகும். மலைப்பகுதி அதிகம் உள்ள இங்கு தேயிலை முக்கிய பயிராகும். இங்கு ரூ.150 கோடி செலவில்  பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஒன்றை இந்திய அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்

இலங்கைக்கு 2 நாட்கள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி இந்த மருத்துவமனையை நேற்று திறந்து வைத்தார்.  இதற்காக கொழும்பு நகரில் இருந்துஹெலிகாப்டர் மூலம் டிக்கோயா நகருக்கு பிரதமர் மோடி சென்றார்.

மேலும், டிக்கோயோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். இதில் அதிபர் சிறீசேனா, பிரதமர்ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது-

மோதல் கூடாது

இலங்கையில் வாழும் தமிழர்களும், சிங்கள மக்களும் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும். வேற்றுமை என்பது, போற்றக்கூடியதாக இருக்க வேண்டும், மோதலுக்காக இருக்க கூடாது. சிங்கள, தமிழ் மொழி ஒற்றுமையாக இருப்பதைப் போல் நீங்களும் நல்லிணக்கமாக இருக்க வேண்டும்.

கூடுதலாக 10 ஆயிரம் வீடுகள்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக என்னுடைய அரசும், இந்திய மக்களும் இருப்பார்கள். தமிழக மக்களுக்கு ஏற்கனவே 4 ஆயிரம் வீடுகளை இந்திய அரசு கட்டிக் கொடுத்து உள்ளது. கூடுதலாக 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

ஆம்புலன்ஸ் சேவை

இலங்கையின் தெற்கு, மேற்கு மாநிலங்களில் 1990 என்ற அவசரகால ஆம்புலன்ஸ்சேவையை இந்தியா தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதை டிக்கோயா வரை நீட்டிக்க முடிவுசெய்துள்ளோம்.

90 ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கைக்கு மகாத்மா காந்தி வருகை புரிந்தார். அப்போது, இங்கு வாழும் மக்கள் மத்தியில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கான செய்தியை விதைத்துவிட்டு சென்றார். காந்தியின் வருகையின் நினைவாக கடந்த 2015ம் ஆண்டு மதாலே நகரில் மகாத்மா காந்தி சர்வதேச மையத்தை தொடங்கினோம்.

சிலோன் தேயிலை

தேயிலை தோட்டத் தொழிலாளர்களான உங்களுக்கும், எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. உலகளவில் சிலோன் தேயிலை என்பது மிகவும் புகழ்பெற்றதாகும். உங்களின் வியர்வை, கடின உழைப்பு அந்த புகழுக்கு பின்னால் இருக்கிறது.  இந்த செழுமையான நிலத்தில் விளைந்ததுதான் சிலோன் தேயிலை என்பதை உலகம் அறியும்.

பழமையான தமிழ் மொழி

உலகில் மிகவும் பழமையான மொழிகளிலும், பேசப்பட்டுவரும் மொழியாகவும் தமிழ் மொழி இருந்து வருகிறது. நீங்கள் இங்கு தமிழ் மொழியோடு, சிங்களமும் பேசுவது சிறப்பு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் கடின உழைப்பு மூலம் பங்களிப்பு செய்யும் தமிழ்சமூகத்துக்கு வாழ்த்துக்கள்.

கடின உழைப்பும், மன வலிமையும் கொண்ட உங்கள் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி பேசி முடிக்கும் போது திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி முடித்தார். அதன்பின் தமிழ் சமூகத்தின் முக்கியத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துபேசினார்.