மன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க கோரி நாடாளுமன்றத்தில் 6-வது நாளாக காங்கிரஸ் எம்.பி.க்கள்  அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நிகழ்ச்சிகள் முடக்கப்பட்டு 27-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பாகிஸ்தானுடன் இணைந்து

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் தூதருடன் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தியதாகவும், பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் சதி திட்டம் தீட்டுவதாகவும் கூறி இருந்தார்.

தொடரும் அமளி

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மோடி மன்னிப்பு கேட்க மாட்டார் என்று டெல்லி மேல்-சபை தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக அறிவித்த பின்பும் அமளி தொடர்ந்து வருகிறது.

6-வது நாளாக

நேற்று முன்தினம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல் -குழப்பத்தால், மாநிலங்களவையில் நியமன எம்.பி.யான சச்சின் தெண்டுல்கரின் கன்னி பேச்சு தடைப்பட்டது.

அங்கு நேற்று 6-வது நாளாக காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கூச்சல்- குழப்பத்தில் ஈடுபட்டனர்.

27-ந்தேதி வரை

இதனால் மாநிலங்களவையில் எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கியது. அதைத் தொடர்ந்து, வருகிற 27-ந்தேதி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘அவை நடவடிக்கைகள் தொடங்குவதும், முடங்குவதுமாக செல்வது தேசத்திற்கு நல்லது அல்ல’’ என்றார்.