கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இன்னும் பொதுச்சமூகத்தில் பரவவில்லை என்ற ஒரே ஆறுதலுடன், மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளன. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ நெருங்கிய நிலையில், நாடு முழுவதும் நேற்றிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் மோடி. ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வண்ணம், சிறிய மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், மெடிக்கல்கள் ஆகியவை திறந்துள்ளன. 

இந்தியாவில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனாவின் தாக்கம் வீரியமடையவில்லை. ஆனாலும் கொரோனாவிற்கு 11 பேர் பலியாகியுள்ளனர். நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றி ஊரடங்கை பிறப்பித்த பிரதமர் மோடி, இன்று தனது சொந்த தொகுதியான வாரணாசி மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது, வாரணாசி தொகுதியின் எம்பி-யாக இந்த மாதிரியான இக்கட்டான சூழலில் நான் உங்களுக்காக உங்களுடன் இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் பணிகள் அதிகமாக இருப்பதால், என்னால் உங்களுடன் இருக்க முடியவில்லை என்பது உங்களுக்கே தெரியும். எவ்வளவு பிசியாக இருந்தாலும் வாரணாசி மக்களின் நிலை மற்றும் வாரணாசியின் நிலவரம் குறித்த தகவல்களை கேட்டறிந்துகொண்டே தான் இருக்கிறேன். 

கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள், உதவிகளுக்காக வாட்ஸ் அப்புடன் இணைந்து அரசாங்கம், ஹெல்ப்டெஸ்க்கை உருவாக்கியுள்ளது. 9013151515 - இதுதான் அந்த வாட்ஸ் அப் நம்பர். 

மஹாபாரத போரில் 18 நாளில் வெற்றி கிடைத்தது. இந்த கொரோனா வைரஸுக்கு எதிரான நமது நாடு நடத்தும் போரில் 21 நாம் வெற்றி பெற 21 நாட்கள் தேவை. எனவே 21 நாட்கள் வீட்டிற்குள் இருந்து இந்த போரில் வெல்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.