ஜனாதிபதி(ராஷ்டிரபதி) ஆடு மேய்க்க போய் இருக்கிறார்; பிரதமர்(பிரதான்மந்திரி) சந்தைக்கு போய் இருக்கிறார் என்று கூறினால் அதிர்ச்சி அடைந்துவிடாதீர்கள்.

 ‘சாம்சங்’குக்கு வயிற்று வலிக்குது சார் மருந்து வேணும்’, ‘ஆன்ட்ராய்ட்டுக்குவயிற்றுப்போக்கு மருந்து வேண்டும்’ என்று கூறினாலும் ஆச்சர்யப்படவேண்டாம்.

இதெல்லாம் ஆட்களின் பெயர். இப்படி வினோதமான பெயர்களை சூடிக்கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமம் இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம், பன்டி மாவட்டத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளராம் நகர் என்ற கிராமத்தில் தான் இப்படி வினோத பெயர்களை சூடிக்கொண்டு ஆட்கள் வாழ்ந்து வருகிறார்கள். 

இதுமட்டுமல்ல, சிம்கார்டு, சிப், ஜியோனி,மிஸ்டு கால், ஹைகோர்ட், ஐ.ஜி., எஸ்.பி. கலெக்டர் என அரசு உயர்பதவிகளின் பெயர்களையும், செல்போன்களின் பெயர்களையும் வைத்துக் கொண்டு மிரட்டி வருகிறார்கள்.

500 பேர் மட்டுமே வசிக்கும் ராம்நகர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கஞ்சார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கல்வியறிவு இல்லாத இவர்கள் திருட்டு, கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.

போலீஸ் அதிகாரிகளையும், அரச உயர் அதிகாரிகளைப் பார்த்து நெகிழ்ந்து அவர்களின் பதவியையே தங்களின் குழந்தைகளுக்கு பெயராக வைத்துள்ளனர்.

இந்த கிராமத்துக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் திடீரென வருகை தந்து, அடிப்படை வசதிகளை பார்வையிட்டார். கலெக்டரின் மிடுக்கான தோற்றத்திலும் தோரணையிலும் மிரண்டுபோன ஒரு பெண் தனது பேரனுக்கு ‘கலெக்டர்’ என பெயர் வைத்துவிட்டார்.

அதுமட்டுமல்ல, ஒருவர் கிரிமினல் குற்றம் தொடர்பாக சிறையில் இருந்தார். அப்போது அவருக்கு ஹைகோர்ட் ஜாமின் வழங்கியது. இதனால், தனது மகனுக்கு ‘ஹைகோர்ட்’ என பெயர் வைத்துவிட்டார். அவர் மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், ஊரில் அனைவரும்  அவரை ‘ஹைகோர்ட்’ என்றே அழைக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்ட இந்த கிராமத்தினர், தங்களின் பிள்ளைகளுக்கு இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என பெயர்களை வைத்து அழைக்கிறார்கள்.

திருட்டு, இது குறித்து நெய்ன்வாலா சுகாதார மையத்தின் பதிவாளர் ரமேஷ்சந்த் ரதோர் கூறுகையில், “ நான் பணியில் சேர்ந்திருந்தபோது, என்னிடம் பெயர் பதிவு செய்ய வந்தவர்கள் நோக்கியா, சாம்சங், ஜியோனி, சிம்கார்டு,மிஸ்டுகால், பிரதமர் என பெயர் கூறினார்கள். அதன்பின்தான் இது இவர்களின் பெயர் என அறிந்தேன்’’ என்றார்.

ராம்நகர் கிராமத்தின் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “ ராம் நகர் கிராமத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் கொள்ளை, வழிப்பறி, திருட்டு என செயல்களில் ஈடுபடுகிறார்கள். அடிக்கடி நீதிமன்றம்,போலீஸ் நிலையம் என செல்கிறார்கள்.

அங்கு அதிகாரிகளைப் பார்த்து அதன் தாக்கத்தால்,  தங்கள் பிள்ளைகளின் பெயர்களை  அதிகாரிகளின் பதவியில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.