கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.

கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்துவரும் கனமழையால் அம்மாநிலம் முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழைக்கு 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

2 லட்சத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கேரளாவிற்கு குடிநீர் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், கடற்படை ஆகிய படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும் நிலச்சரிவாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மழை வெள்ளத்தினால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு கேரளா சென்றடைந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ராணுவ விமானத்தில் கொச்சி புறப்பட்டு சென்றார். 

இதையடுத்து இன்று கொச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக எர்ணாகுளம், பத்தினம்பட்டா உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட இருந்தார். ஆனால் இதற்கிடையே தொடர்ந்து கொச்சியில் மழை பெய்துவருவதால் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடும் திட்டத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக கூறப்படுகிறது. 

கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார்.