தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்கள் தேர்வுகளின்போது புத்தகத்தைப் பார்த்தே தேர்வுழுதும் முறை கொண்டு வரப்படும் என்று கர்நாடக தொடக்க கல்வி அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மஜத கூட்டணியில் இருந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மகேஷ் என்பவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி அமைச்சராக மகேஷ் பொறுப்பேற்றுள்ளார்.

அமைச்சர் மகேஷ், சாம்ராஜ் நகரில் மாணவர்களுக்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் புத்தகத்தைப் பார்து குறிப்புகள் எடுக்கின்றனர். ஆனால், மாணவர்கள் மட்டும் ஏன் புத்தகத்தை பார்க்காமல் தேர்வு எழுத வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வுகளின்போது, புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் முறை கொண்டு வரப்படும் என்றார். 

இந்த திட்டம் குறித்து உளவியல் மருத்துவர்களிடமும், கல்வி நிபுணர்களிடமும் தாம் ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் மகேஷ் பேசினார். அமைச்சர் மகேஷின் இந்த பேச்சு குறித்து பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.