கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள அவருடைய சகோதரி பிரியங்கா இன்று கேரளா வருகிறார்.
அமேதி தொகுதியில் போட்டியிட்டிருக்கும் ராகுல் காந்தி, கேரளா  மாநிலம் வயநாடு தொகுதியிலும் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் ராகுல் காந்தி களத்தில் இறங்கியதால், பாஜக தனது வேட்பாளரை மாற்றி விட்டு கூட்டணி கட்சியான விடிஜேஎஸ் கட்சியின் தலைவா் துஷாரா வெள்ளம்பள்ளியை வேட்பாளராகக் களம் இறக்கியுள்ளது. ஆளும் கட்சி கூட்டணியான எல்.டி.எப் வேட்பாளராக சிபிஐ வேட்பாளராக சுனீா் களத்தில் போட்டியிடுகிறார்.

 
வயநாட்டில் மூன்று தேசிய கட்சிகளும் மல்லுக்கட்டுவதால், மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த முறை சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் இடதுசாரிகளை தோல்வியடைந்தனர். எனவே இந்த முறை தொகுதியைக் கைப்பற்ற அக்கட்சி கடுமையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது. இடதுசாரி தலைவர்கள் வயநாட்டில் தனி கவனம் செலுத்தி பிரசாரம் செய்துவருகிறார்கள்.
  ராகுல் காந்தி ஏற்கனவே ஏப்ரல் 16, 17-ம் தேதிகளில் வயநாடு உள்பட 4 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இரண்டு நாட்கள் இங்கே பிரசாரம் செய்ததால், இறுதிகட்ட பிரசாரத்துக்கு அவரால் வர முடியவில்லை. இந்நிலையில் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுலின் சகோதரி பிரியங்கா இன்று வயநாடு தொகுதிக்கு வருகிறார். வயநாடு மற்றும் அதைச்சுற்றியுள்ள தொகுதிகளில் தங்கி இன்று நாளையும் பிரசாரம் மேற்கொள்கிறார். 
கேரளாவில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. கேரளாவில் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.